திருச்சி: உள்ளூரிலே விலை போகாதவர் என பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் குறித்து அமைச்சர் நேரு கடுமையாக விமர்சனம் செய்தார்.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தவர் பிரசாந்த் கிஷோர். பின்னர், 2024ம் ஆண்டு அவர் தனது பணியை விட்டுவிட்டு, அரசியல் கட்சியை தொடங்கினார். இவரது கட்சியான  ஜன் சுராஜ் கட்சி பீகார் சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, அவ்வப்போது அரசியல் செய்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிக்கு, தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அடிக்கடி சென்னை வந்து நடிகர் விஜயையும், அவரது கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசி வருகிறார்.

இன்று சென்னை அருகே நடைபெற்று வரும் தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் உரையாற்றியபோது, திமுக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்தார். தமிழகத்தில் நடைபெறும் அரசியல் ஊழல் வேறெங்கும் கண்டதில்லை என அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோருக்கு அமைச்சர் நேரு, அவர் விலை போகாதவர் என பதிலடி கொடுத்துள்ளார்.

‘திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மற்றும் கட்சியின் சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறியதாவது,‘  த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோருடன் மேடையேறியுள்ளார் நடிகர் விஜய். பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பணியாற்றி விட்டு தற்போது மாற்று கட்சியில் பணியாற்ற சென்றுள்ளார்.   யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை. ஏனெனில் பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர். தனது கட்சிக்கு டெபாசிட் கூட வாங்காதவர். பீகார் தேர்தல் முடிவுகள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. அவர் இங்கு வந்து தொகுதி வியூகங்கள் வகுப்பதெல்லாம் எப்படி இருக்கும்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதைத் தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் நடைபெறும் அரசியல் ஊழல் வேறெங்கும் கண்டதில்லை!  தவெக விழாவில் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேச்சு…