சேலம்: தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக, தமிழ் வளர்ச்சிக்காக இதுவரை என்ன செய்தது என கேள்வி எழுப்பிய  பாமக தலைவர்  அன்புமணி  ராமதாஸ், தமிழகத்தில் ஒரு கொள்கையை மாற்றச் சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது என்றும் விமர்சித்தார்.

சேலத்தில் பாமக கௌரவ தலைவரும் சட்டமன்ற குழு தலைவருமான ஜி.கே.மணி இல்ல திருமண விழழ நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர்  மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். விழாவில் மருத்துவர் அன்புமணி வாழ்த்துரை நிகழ்த்தினார்.

முன்னதாக, ஜி.கே.மணியின் முதல் மனைவியின் சகோதரர் தனராஜ் மகன் சேதுநாயக், மணமகள் விமலாம்பிகை திருமண வரவேற்பு நிகழ்ச்சி சேலம் மெய்யனூர் சூரமங்கலம் மெயின் ரோடு ஸ்ரீ வரலக்‌ஷ்மி மஹாலில்  பிப்ரவரி 25ந்தேதி அன்று மாலை  நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு திருமணம் நடைபெறுகிறது. ஏற்கனவே வரவேற்பு விழாவில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கலந்து கொண்டார்.  மேலும்,  அதிமுக என பல தரப்பினரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில், நடிகர் விஜயின் மகன் கலந்துகொண்டது பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இன்று மணமக்களை வாழ்த்தி பேசிய அன்புமணி ராமதாஸ்,  தமிழகத்தில் புதிய அரசியல் பிரச்னையாக மொழி பிரச்னை அதிகம் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்க முடியும் என்று மத்திய அரசு கூறுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது, அது தவறு என்றார்.

மத்திய அரசுக்கு மும்மொழி கொள்கை, திமுகவிற்கு இரு மொழி கொள்கை உள்ளது. ஆனால் பாமகவிற்கு ஒரு மொழி கொள்கைதான். எனவே தாய் மொழியை போற்றி வளர்ப்போம் என்று கேட்டுக்கொண்டார். நோபல் பரிசு பெற்றவர்களில் 90 விழுக்காட்டினர் சொந்த தாய் மொழி படித்து வந்தவர்கள் தான் என சுட்டிக்காட்டிய அன்புமணி, தமிழகத்தில் தமிழ் மொழியை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழை வளர்க்க பாமக நிறுவனர் ராமதாஸ் அரும்பாடு பட்டு பல போராட்டங்களையும், நிகழ்சிகளையும் நடத்தினார். மக்கள் தொலைக்காட்சி தொடங்கிய பின்னர் தான் தமிழில் உள்ள வார்த்தைகள் பிற ஊடகங்கள் பயன்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் 45 சதவிகிதம் மட்டுமே அரசு பள்ளி உள்ளது. அரசின் கடமை கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்பது ஆனால் கடந்த 58 ஆண்டுகளில் 55 ஆயிரம் தனியார் பள்ளிகள் தமிழகத்தில் ஊடுருவி உள்ளது என்றார்.

தமிழ்நாடு அரசு கூட்டும் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் பாமக பங்கேற்கும்  என்றவர்,  தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்தது? தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக, இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என்று அன்புமணி கேள்வி எழுப்பினார்.  எந்த மாநிலத்திலும் மொழியை திணிக்கக் கூடாது என வலியுறுத்தியவர்,  தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் மாநில அரசின் உரிமை. தமிழகத்தில் ஒரு கொள்கையை மாற்றச் சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது. மேலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க மறுக்கும் தமிழக அரசு, அந்த நிதி தமிழகத்திற்கு வேண்டாம் என ஒதுக்க வேண்டியது தானே என்றார்.