மதுரை:  ஜல்லிக்கட்டு போட்டிகளில் அமைச்சர் மூர்த்தி சாதி பாகுபாடு காட்டியதாக புகார்கள் எழுந்த நிலையில், இதற்கு அமைச்சர் பதில் அளிக்காமல்,  மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்று முடிந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாகவும், இதற்கு திமுக அமைச்சர் மூர்த்திதான் காரணம்  பாலமேடு பகுதி மக்கள் ஓப்பனாக குற்றம் சுமத்தியதுடன்,   தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு  தெரிவித்தனர். மேலும், பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாடுபிடி வீரருக்கு அனுமதி தரப்படாமல், கடைசி நேரத்தில் அனுமதி கொடுக்கப்பட்டதும், அதை கேட்ட அவர் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே கடந்த ஆண்டு (2024) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியிலும் பாகுபாடு காட்டப்பட்டதாக அமைச்சர் மீது,  ஜல்லிக்கட்டு வீரர் அபிசித்தர் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், இதற்கு அமைச்சர் மூர்த்தி இதுவரை பதில் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், சாதி பாகுபாடு குறித்த விமர்சனங்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார். (இவர்தான்,   அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மேடையில் இருந்து, அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதியின் நண்பர்கள் அமருவதற்காக இருக்கையில் இருந்து எழுந்துசெல்ல பணிக்கப்பட்டவர்) 

அதன்படி,  ஜல்லிக்கட்டு போட்டிகளில், எந்த வித ஜாதி பாகுபாடும் காட்டப்படவில்லை என்றவர்,  மாடுபிடி வீரர்களின் உடற்தகுதி மற்றும் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் மட்டுமே ஆன்லைன் விண்ணப்பத்தில் கோரப்படுகிறது. இதில் இனம், மதம் போன்ற எவ்வித விவரங்களும் கோரப்படுவதில்லை  என  விளக்கம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட அறிக்கையில், ‘மதுரை மாவட்டத்தில் 2025 ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள்.

மாடுபிடி வீரர்களின் உடற்தகுதி மற்றும் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் மட்டுமே ஆன்லைன் விண்ணப்பத்தில் கோரப்படுகிறது. இதில் இனம், மதம் போன்ற எவ்வித விவரங்களும் கோரப்படுவதில்லை. இந்த உடடல் தகுதித் தேர்வில் பங்கேற்க வரும் மாடுபிடி வீரர்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சுற்றுக்கு 50 நபர்கள் வீதம் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் 1 மணி நேரம் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளில் சமூக பாகுபாடுகள் ஏதும் இல்லை.

போட்டியின் நிறைவு நேரத்தினை கருத்தில் கொண்டு போட்டியின் முடிவில் கடந்த சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய மாடுபிடி வீரர்களை கொண்டு இறுதி சுற்று நடத்தப்பட்டு சிறந்த மாடுபிடி வீரர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

கடந்த 15ம் தேதி அன்று பாலமேடு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஜாதி பாகுபாடு காரணமாக தமிழரசன் என்பவர் கலந்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வில்லை என்றும், தனது டோக்கன் எண் 24 என்றும் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழரசன் என்பவரின் டோக்கன் எண் 204. மேலும், அவர் போட்டிக்கு தாமதமாக வந்ததால் 9வது சுற்றில் களமாட இருந்தார். 8வது சுற்று முடிக்கப்பட்ட போது மழை மற்றும் நேரமானதால் இறுதியாக சிறந்த மாடுபிடி வீரர்களுக்கான சுற்று மட்டும் நடத்தப்பட்டு, 9வது சுற்று நடத்தப்படமால் நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. மேற்படி தமிழரசன் என்பவர் சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது உண்மைக்கு புறம்பானவை’.

இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு! அமைச்சர் மூர்த்தி மீது டைரக்டர் ரஞ்சித் குற்றச்சாட்டு…