சென்னை: தடுப்பூசி மெகா முகாம்; மக்களை தேடி மருத்துவம்; வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று நடைபெறுவதாக இருந்த 8வது மெகா தடுப்பூசி முகாம் அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நொச்சிக்குப்பம் குடியிருப்பு வாசிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு நடத்தியதுடன், சென்னை பட்டினம்பாக்கத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சு.கூறியதாவது,

தமிழகத்தில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர் களுக்கு வீடு தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடப்படும். 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோர் பட்டியலில் 65 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் விரைவில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாநிலம் முழுவதும் இதுவரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் வெற்றியடைந்துள்ளன. இன்று நடைபெறுவதாக இருந்த 8வது  மெகா தடுப்பூசி முகாம் நவம்பர் 14ம் தேதி அன்று நடைபெறும். நவம்பர் மாதத்திற்குள் 100% தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டிலேயே அதிக அளவிலரான தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமை கிடைத்துள்ளது.

அதுபோல, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 32,36,622 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று கூறினார்.

மேலும், நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில்,  மருத்துவ கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக தீபாவளி விடுமுறைக்கு பின் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் உருமாறிய டெல்டா வகை வைரஸின் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.