திருச்சி: “மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்” என மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்து உள்ளார்.

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில் ரூ. 28 கோடியே 42 லட்சம் மதிப்பிலான பணிகளைத் திருச்சி உறையூர் காவல் நிலையம் அருகே குடிநீர்த் தொட்டி வளாகத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். அப்போது,  குடிநீர் ஆதார மேம்பாட்டுத் திட்டத்தில் தரைமட்டத் தொட்டி கட்டுதலுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், பெரியார் நகர், கம்பரசம் பேட்டை நீர் சேகரிப்பு கிணற்றில் புதிதாக நீர் சுற்று வட்ட குழாய்கள் அமைத்தல், மோட்டார் பம்புசெட் டீசல் ஜெனரேட்டர் சமநிலை நீர்த்தேக்கத் தொட்டி, நீர் பரிசோதனை ஆய்வகம் மற்றும் நடை பாலம் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம் பத்திரிகையாளர்கள், பாஜக உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பாஜகவுக்கு இடையூறு செய்தால், திமுகவின் பிசினலில் கைவைப்போம் என அண்ணாமலை பேசியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர்.

“அண்ணாமலைக்கு எல்லாம் பயப்படத் தேவை இல்லை. அவர் புதிதாக பா.ஜ.க-வில் தலைவராகி இருக்கிறார். அவர் மக்களிடம் பெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்று பேசுகிறார். தி.மு.க எதையும் சமாளிக்கும் வலுவான கட்சி. நாங்கள் சந்திக்காத எதிர்ப்பா? மிசாவையை  எதிர்த்த இயக்கம் இது. இதற்கெல்லாம் தி.மு.க ஒருபோதும் பயப்படாது” என்று காட்டமாகப் பேசினார். மேலும் செய்தியாளர்கள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பியதுபோது,  “அவர் தொடர்பான கேள்விகளை விட்டுத்தள்ளுங்கள். வேறு எதாவது கேளுங்கள்” என்று கூறினார்.