சென்னை:   சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது அல்ல, தீர்ப்பு சரிதான் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறி ஞர்கள் வாதம் செய்தனர்.

கடந்த காலங்களில் அமைச்சர்களாக பணியாற்றிய பலர்மீது ஊழல் வழக்குகள் பதியப்பட்ட நிலையில், அவர்களில் பலர் தற்போது அமைச்சர்களாக உள்ளதால், வழக்குகள் நீர்த்தப்போகும் வகையில், வழக்கை விசாரணை நடத்திய காவல்துறையினரும், சாட்சிகளும் பல்டியடித்து வருகின்றனர். இதனால், குற்றம் சாட்டுப்பட்டுள்ள பல அமைச்சர்கள் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இது நீதித்துறையின் மீதான நம்பக்கத்தன்மையை கேள்விக்குறியாக்கியது. இதையடுத்து, விடுவிக்கப்பட்ட முக்கிய இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்மீதான வழக்கு உயர்நீதிமன்றம் சூமோட்டோ வழக்காக மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. இதனால், நீதிபதிமீது திமுகவினர் குற்றம் சாட்டிய நிலையிலும், உச்சநீதிமன்றம் இதுபோன்ற வழக்கை மீண்டும் விசாரிக்க பச்சைக்கொடி காட்டியது.

இதன் காரணமாக,  கடந்த 2006-10 காலகட்டத்தில் அமைச்சராக பதவி வகித்தபோது ரூ. 44.59 லட்சம் அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோரை விடுவித்துஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பளித்தது. அதாவது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், அவர்களை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.  2023ம் ஆண்டு ஜூலை 20ந்தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்பை, மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறார். இந்த வழக்கு மார்ச் 8ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  கேகேஎஸ்எஸ்ஆர் தரப்பில்  டெல்லி மூத்த வழக்கறிஞர் எஸ்.முரளீதரும், அவரது மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது அவர்கள், இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்ததில் எந்த தவறும் இல்லை. அதை ஆராய்ந்து இந்த வழக்கில் இருந்து 3 பேரையும் விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பும் சட்டவிரோதமானது அல்ல. கீழமை நீதிமன்றங்கள் தவறான முடிவுகளை எடுத்து இருந்தால் மட்டுமே தாமாக முன்வந்து மறுஆய்வு செய்ய முடியும். சொத்துகள் தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை முழுமையாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு செலவழிக்கப்பட்ட மருத்துவ செலவினங்களை அவரது சம்பந்தி செலுத்தியுள்ளார். பின்னர் அந்த தொகையை அரசு திருப்பி செலுத்தி யுள்ளது. அந்ததொகையையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கில் கொள்ளவில்லை என வாதிட்டனர்.

அதையடுத்து இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு தலைமை வழக்கறிஞரின் வாதத்துக்காக இந்த வழக்கை வரும் மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.