சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாணவ, மாணவிகளுக்காக அரசு பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்  தொடங்கப்பட்டு உள்ளது. இந்த முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆதார் அடையாள அட்டை பெறவும், ஏற்கனவே உள்ள ஆதார் அட்டைகளில் திருத்தம் செய்து கொள்ளவும் ஏதுவாக,அரசு பள்ளிகளில் ஆதார் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது.

அதாவது, பள்ளி மாணவ – மாணவியருக்கு தமிழக அரசு சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இத் தொகையை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்த, புதிதாக கணக்கு துவங்க வேண்டியுள்ளது. அதற்கு, ஆதார் அட்டை தேவை. கடந்த, 2024 – 25 கல்வியாண்டில், முதலாம் வகுப்பில் புதிதாக சேர உள்ள, ஐந்து வயது பூர்த்தியடைந்த, 8 லட்சம் மாணவர்கள்; தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும், 15 வயது பூர்த்தியடைந்த, 9.94 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் பதிவு புதுப்பிக்கப்பட உள்ளது.  ஏற்கனவே ஆதார் பதிவு செய்திருந்தாலும், குழந்தை பெயர், பிறந்த தேதி, முகவரியில் பிழையிருந்தால் திருத்திக் கொள்ளலாம். கோவை காளப்பட்டி அரசு பள்ளியில் நேற்று, ஆதார் பதிவு புதுப்பிக்கும் திட்டம்  மீண்டும் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாமை, கோயம்புத்தூர் மாவட்டத்தில்  தொடங்கி வைத்தார்.  பின்னர்  மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்து, அதற்கான சான்றிதழை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது ,  ”பள்ளிக் கல்வித்துறை சார்பில், 57 வகையான திட்டங்கள் செயல்படுத்துகிறோம். இவற்றை மக்களிடம் சேர்க்கும் பணியில், பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக, மண்டல மாநாடு நடத்தி வருகிறோம். ”அடுத்த மாதம் காஞ்சிபுரத்தில் மாநாடு நடக்க உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மட்டும், இதுவரை, 448 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளது,” என்றார்.

ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக, இந்திய அரசாங்கத்தின் சார்பாக வழங்கிய அடையாள எண் ஆகும். இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படுகிறது. ஆதார் அடையாள அட்டை, இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கும் வழங்கப்பட்டு வரும் 12 இலக்கு அடையாள எண் தாங்கிய அட்டையாகும்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம், மாநில அளவில் நேற்று பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 1,381 அரசு பள்ளிகளில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற ஆதார் பதிவு சிறப்பு முகாம்  தொடங்கப்பட்டு உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்க நிரந்தர ஆதார் மையத்திற்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் எண் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ளப்படுகிறது. இம்முகாமை பயன் படுத்திக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் பெற்றுத்தர, அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள (2021 கணக்கெடுப்பின்படி) மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை – 58,897. இதில்,  அரசு பள்ளிகளின் எண்ணிக்கை – 37,579. அரசு உதவிபெறும் பள்ளிகளின் எண்ணிக்கை -8328.. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை – 12,382. பிற பள்ளிகள் – 608.

தற்போது அரசு பள்ளிகளில் மட்டும் ஆதார் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டு உள்ளது. இதை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உலகின் 2வது பெரிய மக்கள்தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம், நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம் ஆகும். இந்தியாவில் இந்த திட்டம், கடந்த 2009 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் 130 கோடியே 20 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு, ஆதார் அட்டை வழங்கப்பட்டு உள்ளது.