சென்னை

மிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகத் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.

 

 

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆவார்.  இவர் திமுக கூட்டணி சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.  இவர் தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதாக நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வேல்முருகன் தனை அறிக்கையில், “மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவாரப் பகுதிகளான களியலில் தொடங்கி ஆரல்வாய்மொழி வரை கனிம வள கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   இதில் குறிப்பாக, நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட லாரிகளில், கல், ஜல்லி, பாறை, செயற்கை மணல் ஆகியவை கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. கனிமவளத் துறையிடம் இருந்து கேரளாவுக்கு 50 லாரிகளில் கனிமவளம் கொண்டு செல்வதாக அனுமதி பெற்றுவிட்டு, 600-க்கும் மேற்பட்ட லாரிகளில் கடத்திச் செல்லப்படுகிறது. அதோடு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக 8 யூனிட் வரை லாரிகளில் கனிமவளம் ஏற்றி செல்லப்படுகிறது.

கனிமவளச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின் படி கன்னியாகுமரியில் சிறு குன்றுகளில் கூட கற்களை உடைக்க முடியாது. ஆனால், விதிமுறைக்குப் புறம்பாக, கனிமவள கொள்ளை தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலையில் நடைபெற்று வருவது வேதனையானது.  எனவே, மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து அரங்கேறி வரும் கனிமவள கொள்ளையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். அனுமதி பெற்று சட்ட விரோதமாக இயங்கி வரும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை அரங்கேறிய கனிமவள கொள்ளை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி, சுற்றுச்சுழல் ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள், பத்திரிகையாளர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.