சென்னை:  அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருகின்றன.  பல லட்சம் பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதும், அரியர் மாணவர்களை மீண்டும் பெயிலாக்கி உள்ளதற்கும்  சூரப்பா மற்றும் அவர்களுக்கு அவருக்கு துணைபோகும் சில அதிகாரிகளின்  அதிகார வெறியே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

மாநில அரசுடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக,  மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி வருவதாக மாணவர்களும், பெற்றோர்களும் குமுறுகின்றனர்.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக  தமிழகஅரசு  இறுதியாண்டு தேர்வைத் தவிர, பல்வேறு பள்ளி, கல்லூரி தேர்வுகளை, தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. அதன்படி பொறியியர் தேர்வுகளும் தேர்ச்சி பெற்ற அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், அரியர் மாணாக்கர்களின் கோரிக்ககையை ஏற்று, தேர்வுக்கு பணம் கட்டியவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.,

இதற்கு அண்ணா பல்கலைக்கழகம்  கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது. விசாரணையின்போது, இந்திய தொழில்நுட்ப கழகமும் தமிழகஅரசின் உத்தரவை ஏற்க மறுத்தது. இதையடுத்து, அரியர் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு இறுதியில்  நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தியது. இந்த தேர்வுகளின்போது பல்வேறு கெடுபிடிக்களை அண்ணா பல்கலைக்கழம் உருவாக்கி மாணாக்கர்களை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

மேலும், கடந்தஆண்டு (2020) நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடத்தப்படவிருந்த பருவத் தோ்வுகளையும், பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இந்தத் தோ்வில் கலந்து கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆன்லைன் தேர்வின்போது,  முழுமையாக காமிரா மூலம் கண்காணித்த அண்ணா பல்கலைக்கழகம்,  மாணவர்கள் சற்று அசைந்தாலோ,  எந்தவொரு சத்தம் கேட்டாலோ, கூடுதலாக சிறிது நேரம் கேள்வி குறித்து சிந்தித்தாலோ அவர்களின் தேர்வுகளை ஏற்க மறுத்து அடாவடி செய்தது. வீட்டில் லேசான சப்தம் கேட்டால் கூட மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதி அவா்களின் தோ்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தோ்வுக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறியும் பலரது தோ்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறாக நடத்தி முடிந்த தேர்வுகளில் அரியர் மாணவர்கள் உள்பட பல லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வுகளின் முடிவுகள் கடந்த சில மாதங்களாக  வெளியிடப்பபடாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், சூரப்பாக ஓய்வுபெற்ற நாளான 11ந்தேதி (ஏப்ரல்) வெளியிடப்பட்டது.

ஆனால், தேர்வு முடிவுகளோ பயங்கரமாக இருந்ததுடன் 99 சதவிகித அரியர் மாணாக்கர்களின் தேர்ச்சி பெறவில்லை என்றே  அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த பருவத் தோ்வு எழுதிய சுமாா் 4 லட்சம் பேரில் ஒரு லட்சம் மாணவா்களின் தோ்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இதுவரை இல்லாத அளவுக்கு சுமாா் 75 சதவீத மாணவா்கள் தோ்ச்சி அடையவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணைய வழியில் தோ்வு நடத்தப்பட்டதால், இதுவரை அரியா் வைக்காத பல ஆயிரம்மாணவா்களுக்கு அரியா் போடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசுடனான மோதல், ஊழல் குற்றச்சாட்டு, விசாரணை கமிஷன் போன்றவை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுமென்றே இவ்வாறு செய்து உள்ளதாக மாணாக்கர்களும், சில பேராசியர்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.

அதிகார வெறி கொண்ட சூரப்பா மற்றும் அவருக்கு துணை நிற்கும் ஒருசில பேராசிரியர்களின் ஆணவப்போக்கே இதுபோன்ற நடவடிக்கைக்கு காரணம் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றன.  ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில், முதுகெலும்பு இல்லாத எடப்பாடி அரசை பழிவாங்கவே அண்ணாபல்கலைக்கழகம் பல லட்சக்கணக்கான மாணாக்கர்களின் வாழ்க்கையில் விளையாடி வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கூறிய அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில பேராசிரியர்கள்,  இது மாணவா்களின் தவறு அல்ல தொழில்நுட்பக் கோளாறு என்று கூறி வருகின்றனர்.

அப்படியென்றால், இதுகுறித்து உடனே அறிவிப்பு வெளியிட்டு, தோ்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்து உரிய மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும் கல்வியாளா்களும், மாணவா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏற்கனவே அரியர் நிகழ்வுகள் மற்றும் கொரோனா பொதுமுடக்கம், வேலையின்மை  காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை நினைத்து கலங்கி உள்ள நிலையில்,  அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகார வெறி கொண்ட ஆணவ நடவடிக்கை தமிழக மக்களிடையே கொந்தளிப்பை  ஏற்படுத்தி உள்ளது.

‘இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்களும் உடனடி நடிவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டுமே, தவிர கடமைக்காக விசாரித்து,  ஒவ்வொரு விசாரணையின்போதும், ஒவ்வொரு வினாக்களை எழுப்பி, பல மாதங்கள் வழக்குகளை தள்ளி வைத்து மாணாக்கர்களின் வாழ்வில் விளையாடுவதை தவிர்த்து உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.