நியூயார்க்

ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய ஃபேஸ்புக்,  மைக்ரோசாஃப்ட், உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் அடுத்தடுத்து முன் வந்துள்ளன.

உலகெங்கும் கொரோனா கொள்ளை நோய் தாக்கத்தால் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.   ஆயினும், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏராளமான முதலீடுகளை அள்ளிக் குவித்து வருகிறது.  கொரோனாவை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ஐந்து அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

முதல் நிறுவனமாக, ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோவில் 9.9 %, பங்குகளை வாங்கியுள்ளது. அதன் பிறகு, சில்வர் லேக் நிறுவனம் 1.15 % பங்குகளையும், விஸ்டா ஈக்விட்டி நிறுவனம் 2.23 % பங்குகளையும், ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் 1.34 %  பங்குகளையும், கேகேஆர் நிறுவனம் 2.23 % பங்குகளையும் ஜியோவில் இருந்து வாங்கியுள்ளன.
தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஜியோவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  மைக்ரோசாஃப்ட் நிறுவனம்  ஜியோவின் 2.5 % பங்குகளை வாங்கி 200 கோடி டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது.  ஜியோவில் ஏற்கெனவே ஐந்து அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில் இப்போது ஆறாவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இணைந்துகொள்ள உள்ளது.
வரும் 12 முதல் 24 மாதங்களில் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் ரிலையன்ஸ் ஜியோவை பட்டியலிட முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், மைக்ரோசாஃப்ட், பேஸ்புக் என அமெரிக்க மாபெரும் நிறுவங்களிடமிருந்து முதலீடு குவிந்து வருவது ஜியோவின் திட்டங்களுக்குக் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.