சென்னை: சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் கேட்டறிந்தார்.

சென்னையை நெருங்கிய மிக்ஜாம் புயல் கடந்த 4ந்தேதி (திங்கள், டிசம்பர் 4)  சென்னை வழியாக ஆந்திரா சென்று கரையை கடந்ததது. இந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது.  அனைத்து எரிகளும் நிரம்பின. மேலும் வரலாறு காணாத மழையால், சென்னை வெள்ளத்தில் மிதத்தது. மேலும் அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்ததால், சென்னை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. நீர் நிரம்பியதால், முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், சில இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர். புயல் காரணமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் இதன் காரணமாக பெய்த கன மழை மற்றும் பெரு வெள்ளத்தால் மக்கள் இன்னும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். வெள்ளப்பாதிப்பை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. இருந்தாலும், இன்னும்  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை நின்ற பிறகும், வெள்ளம் பாதித்த பல இடங்களில் தண்ணீா் வடியவில்லை, மின்சாரம், தண்ணீா் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலினிடம்  தொலைபேசி மூலம் மழை வெள்ளப் பாதிப்பு குறித்து  கேட்டறிந்தார். முதல்வர் ஸ்டாலின் 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து விளக்கி கூறி, தமிழகத்திற்கு மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்ற பிரதமர், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.