டிஸ்கோ பாடல்கள் மூலம் இந்திய இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவந்த பப்பி லஹரி தனது 69 வது வயதில் இன்று மரணமடைந்தார்.

பப்பி லஹரி 1996 ம் ஆண்டு மும்பை வந்த பாப் உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சனை சந்தித்தார் அது ஒரு சந்தோஷமான அனுபவமாக அவருக்கு அமைந்தது.

இதுகுறித்து 2018 ம் ஆண்டு பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த பப்பி லஹரி தனது தங்கச் சங்கிலியில் இருந்த கணபதி படம் பொறித்த “லாக்கெட்” குறித்து மைக்கேல் ஜாக்ஸன் விசாரித்ததாக அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

1975 ம் ஆண்டு வெளியான ‘சக்மி’ திரைப்படத்திற்குப் பின் ஹிந்தி திரையுலகில் பிரபலமான பப்பி லஹரிக்கு அவரது தாயார் முதன் முதலாக ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசளித்ததாக தெரிவித்தார்.

பின்னர் 1977 ம் ஆண்டு திருமணத்தின் போது அவரது மனைவி அவருக்கு இரண்டு தங்கச் சங்கிலிகளை வழங்கியதாகவும் ஒன்றில் அவரது முதலெழுத்து ‘பி’ பொறிக்கப்பட்ட லாக்கெட்டும் மற்றொன்றில் கணபதி படம் பொறித்த லாக்கெட்டும் இருப்பதாக கூறினார்.

தனது ராசியான கணபதி லாக்கெட் குறித்து தான் மிகவும் போற்றும் மைக்கேல் ஜாக்ஸன் கேட்டதும் எடுத்த எடுப்பிலேயே “இதை நான் யாருக்கும் தரமாட்டேன்” என்று மறுப்பு கூறியதாக அந்த பேட்டியில் பதிவிட்டுள்ளார்.

தங்க மகன் என்று கூறுமளவுக்கு உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து வரும் பப்பி லஹரி அது தனக்கான சிறுசேமிப்பு வங்கி (piggy bank) என்று வேடிக்கையாக சொல்லி மகிழ்ந்துள்ளார்.