நெட்டிசன்:

ஏழுமலை வெங்கடேசன் அவர்களது பதிவு..

காஞ்சிபுரம்… 1972..எம்ஜிஆர்..செம திரில்லிங்..

அக்டோபர் 8ந்தேதி கணக்கு கேட்டதால் அடுத்த இருநாட்களில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், ஒரே வாரத்தில் அதிமுகவை ஆரம்பித்தார். முதல் பொதுக்கூட்டம் 24.10.1972 அன்று காஞ்சிபுரம் தேரடியில்.

கூட்டத்திற்கு கலெக்டர் அனுமதிதரவில்லை. ஏற்பாட்டாளர்களையும் உள்ளே தூக்கிப்போட கிடுகிடுவென வேலைகள் நடந்தது. மாவட்ட எம்ஜிஆர் மன்றத் தலைவர் கே.பாலாஜி, தலைமறைவாக இருந்தபடியே வேலைகளை செய்து வந்தார்.

இன்னொருபுறம் காஞ்சிபுரம் வரும்போது எம்ஜிஆரை தாக்க ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஆசிட் கையுமாய் ஒரு கும்பல் தயாராகிக்கொண்டிருந்தது.

இதை உணர்ந்துவிட்ட ராமாவரம் தோட்டம் தரப்பு, எம்ஜிஆருக்கு அன்றைய தினம் கடுமையான காய்ச்சல் இருப்பதை சுட்டிக்காட்டி அவர் காஞ்சிக்குபோகவே கூடாது என தடைவிதித்தது. அவர் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்ற ரீதியிலும் தகவலை பரப்பியது.

காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்துக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு இது தெரியவர, பதற்றமும் பரபரப்பும் மேலும் எகிறிவிட்டது. கூட்ட ஏற்பாட்டாளரான பாலாஜி, உடனே ராமாவரம் தோட்டம்ஓடினார்.

‘’கூட்டத்திற்கு வரவில்லை யென்றால், இங்கேயே மரத்தில் தொங்கி உயிரை விட்டுவிடுவேன்.. காஞ்சி மண்ணுக்கு வந்து நீங்கள் பத்திரமாக திரும்ப அத்தனை பேரும் உயிரைக்கொ டுப்போம். அண்ணா பிறந்த எங்கள் காஞ்சிதான் உங்கள் எதிர்காலத்திற்கே மீண்டுமொரு முறை திறவுகோல். உங்கள் தைரியத்தை உலகுக்கு காட்ட இன்னொரு சான்ஸ்.. வாருங்கள்’’ என்று பாலாஜி வார்த்தைகளை அள்ளிக்கொட்ட, அதன்பின் எம்ஜிஆரால் மறுப்பே சொல்லமுடியவில்லை..

இருந்தாலும் ஸ்ரீபெரும்புதூர் தாக்குல் அபாயம் இருப்ப தால் பூந்தமல்லி, பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் என வழக்கமான பாதையை தவிர்த்துவிட்டு மாற்றுப்பாதை யோசிக்கப்பட்டது. படப்பை வாலாஜாபாத் வழியாக சின்ன காஞ்சிபுரம் வந்து தேரடி பள்ளிவாசல்வரை எட்டிவிடுவது.. ஆள்நடமாட்டம் இல்லாத அந்த புதர் பகுதிக்குள் ஊடுறுவி வெளியே வந்து பொதுக்கூட்ட மேடையில் எம்ஜிஆர் திடீரென தோன்றுவது.. இதுதான் புதிய திட்டம்.

அரசியல் எதிரிகளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எம்ஜிஆர் மேடையேறிய அந்த காட்சிகளை அவ்வளவு சுலபத்தில் விவரித்துவிடமுடியாது..

ஒருவழியாய் இப்படித்தான், பல திரில்லிங்கான கட்டங்களை தாண்டி காஞ்சிபுரம் தேரடியில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர் தோன்ற, மக்களின் ஆரவாரம் அடங்க நீண்ட நேரம்பிடித்தது.

மைக்கை பிடித்த எம்ஜிஆர் ஒருமணிநேரம் அரசியல் எதிரிகளை விளாசித்தள்ளி பேசிய பேச்சுபற்றி, கே.பாலாஜி, காஞ்சி பன்னீர்செல்வம் போன்றவர்கள் அடிக்கடி மெய்சிலிர்த்து சொன்னதை கேட்டிருக்கிறேன்.

44 ஆண்டுகள் முன்பு இதே நாளில் அதிமுக துவக்கப்பட்டதும் காஞ்சிபுரத்தில்தான். குதிரைப்படையில் வந்து நடிகர் ஆனந்தன் கொடிபிடித்து வர, தேரடியில் முதன்முதலில் அண்ணா உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.

முரசொலிமாறன் கதை வசனம் எழுதி தயாரித்த எங்கள் தங்கம் படத்தில் எம்ஜிஆரிடம் ஒரு காட்சியில் ஜெயலலிதா கேட்பார்
..’’ஏமைய்யா ஏமி நீ எந்த ஊரு சாமி..? அதற்கு எம்ஜிஆர் சொல்லும் பதில்..
‘’கேளம்மா கேளு, நான் காஞ்சிபுரத்தாளு’’

இந்த காலம்தான், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்கிற ஆளுமைகளை எப்படியெல்லாம் அரசியல் சக்கரத்தில் சுற்றவிட்டிருக்கிறது !!!