எம்ஜிஆர் சமாதியில், போலீசாருடன் முன்னாள் அமைச்சர் நத்தம் வாக்குவாதம்!

Must read


சென்னை,
எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக மின்துறை அமைச்சருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
தொண்டர்களோடு வரிசையில் வாருங்கள் என்று போலீசார் தடுத்ததால் ஆவேசமுற்ற நத்தம் விஸ்வநாதன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஜெயலலிதாவின் 2011ம் ஆண்டு அமைச்சரவையில் தமிழக மின்சாரத்துறையின் அமைச்சராக வலம் வந்தவர் நத்தம் விஸ்வநாதன். மேலும் அதிமுக கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
அதிமுகவின் நால்வர் அணி என அழைக்கப்படும், அணியிலும் இடம்பெற்று ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தார்.
ஆனால், அவர் மின்துறை அமைச்சராக இருந்தபோது ஊழலில் ஈடுபடுவதாக வந்த புகார்களை தொடர்ந்தும், திமுகவை சேர்ந்த திண்டுக்கல் ஐ.பெரிய சாமியுடன் இணைந்து தேர்தலில் அதிமுகவுக்கு துரோகம் செய்ததாகவும் அவர்மீது புகார் கூறப்பட்டது.
இதன் காரணமாக ஜெயலலிதாவின் நேரடி எச்சரிக்கைக்கு ஆளானார். அவரிடம் இருந்து  அதிமுகவின் அமைப்புச் செயலாளர், செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் பொறுப்பும் பறிக்கப்பட்டது.
மேலும், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார்.  வருமான வரி துறை அதிகாரிகள் நத்தம் விஸ்வநாதன் வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.
பின்னர் கட்சியில் அவருக்கு மீண்டும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அதிமுக தொண்டர்கள் யாரும் அவரை சீண்டுவதில்லை. இந்நிலையில், இன்று எம்ஜிஆரின் நினைவுநாளை யொட்டி, சென்னை மெரினாவில் உள்ள  எம்ஜிஆர் சமாதிக்கு நத்தம் விஸ்வநாதன் அஞ்சலி செலுத்த ஆதர்வாளர்கள் சிலருடன் வந்தார்.
விஐபிக்கள் செல்லும் வழியில் செல்ல முயன்ற அவரை, அங்கு காவலுக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி, பொதுமக்களுடன் வரிசையில் வாருங்கள் என்று கூறினர்.
இதனால் கோபமுற்ற,  நத்தம் விஸ்வநாதன் நான் யார் தெரியுமா? என்றார். ஆனால், அதற்கு செவிமடுக்காத போலீசார், நீங்கள் யாராக இருந்தாலும் சரி, விஐபி வழியாக உங்களை அனுப்ப முடியாது, பொதுமக்கள் வரிசையிலேயே செல்லுங்கள் என்றனர்.
இதன் காரணமாக போலீசாருக்கும் விஸ்வநாதனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையறிந்த உயர்அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, நத்தம் விஸ்வநாதனை விஐபி வழியாக செல்ல அனுமதித்தனர்.

More articles

Latest article