எம்ஜிஆர் விழாவுக்கு செலவிடும் பணத்தை டெங்குக்காக செலவிடுங்கள்! விஜயகாந்த்

சென்னை,

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு செலவிடும் பணத்தை டெங்கு காய்ச்சலை தடுக்க செலவிடுங்கள் என்று அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் யோசனை தெரிவித்து உள்ளார்.

கடந்த 6ந்தேதி தமிழக கவர்னராக பதவி ஏற்ற பன்வாரிலாலை 7ந்தேதி திடீரென சந்தித்து பேசிய விஜயகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு,  தமிழகத்தில் டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தி வேண்டும் என்றும் புகார் கடிதமும் கொடுத்தார்.

இந்நிலையில், டெங்குவின் பாதிப்பு அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், எம்ஜிஆர் விழாவுக்கும் செலவிடும் பணத்தை டெங்குவை தடுக்க செலவிடலாம் என்று கூறி உள்ளபார்.

இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் டெங்கு காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு சுமார் 400 பேருக்கு மேல் இறந்துள்ளார்கள். இதை அரசு மறைக்கிறது. ஆரம்ப சுகாதார மையங்களிலும், அரசு கல்லூரி மருத்துவமனைகளிலும், சுமார் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களை, டெங்கு காய்ச்சல் என்று சொல்லாமல், மர்ம காய்ச்சல் என்று தவறான தகவலை மக்களிடத்தில் பரப்பி வருகிறார். டாக்டர்களோ டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுத்தான் இறந்துள்ளார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

இதை கவனிக்க வேண்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களை பற்றி கவலைப்படாமல் மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அ.தி.மு.க. அறக்கட்டளையில் இருந்து செலவு செய்யாமல், மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி ஆடம்பர விழாக்களாக கொண்டாடி வருகிறார்கள். இதற்கு செய்கின்ற செலவை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவாக செய்திருக்கலாம்.

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அனைவரும், தங்கள் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்து, அவர்களுக்கு உரிய உதவிகளை செய்து, டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
MGR centenary function spend money may used for Dengue purpose! Vijayakanth advice to the government