மேட்டூர்

மேட்டூர் அணையில் விநாடிக்கு 28,650 கன அடி நீர் வரத்து காரணமாக நீர் மட்டம் 100 அடியை எட்டி உள்ளது.

 

தற்போது கர்நாடகாவில் மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை மற்றும் லேசான மழை மாறி மாறி பெய்து வருகிறது.  இதையொட்டி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.  ஒரு வாரமாக ஓரளவு மழை ப் பெய்து வருகிறது.  நேற்று முன் தினம் 13,477 கன அடியாக இருந்த நீர் வரத்து நேற்று 30,634 அடியாக இருந்தது.  இன்று சற்றே குறைந்து 28,650 கன அடி ஆகி உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 100 கனாடி மற்றும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 550 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.  மேட்டூர் அணையின் நீர் வரத்து இதை விட அதிகமாக உள்ளதால் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.   அணையின் நீர் மட்டம் நேற்று முன் தினம் 95.10 அடியாக இருந்தது.  இன்று காலை 99.68 அடியாக பிற்பகல் அது 100 அடியை எட்டி உள்ளது.

அணையின் நீர் மட்டம் கடந்த மாதம் 75 அடியாகக் குறைந்து தற்போது 100 அடியை எட்டி உள்ளது.  வரும் ஜனவரி மாதம் முதல் டெல்டா பாசனத்துக்குத் தடையின்றி நீர் கிடைக்கும் என்பதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  தற்போது அணையின் நீர் இருப்பு 64.42 டிஎம்சி ஆக உள்ளது.  அதிக நீர் வரத்துக் காரணமாக ஒகேனக்கல்லில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.