சென்னை: மெட்ரோ ரயில் பணி காரணமாக, சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் மார்ச் 30ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செயல்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் கந்தன்சாவடி சாலையில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் வேளச்சேரி நோக்கி எஸ்.ஆர்.பி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை ஏற்படுத்தப்படும்.
அதற்கு மாற்றாக ஒய்.எம்.சி.ஏ. முன்பு புதிய “U” திருப்பம் செய்து, எஸ்.ஆர்.பி. சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி செல்லலாம்.
இந்த போக்குவரத்து மாற்றம் மார்ச் 30ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு மட்டும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தப் போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.