டெல்லி: கொரோனா தொற்றுபரவல் கட்டுக்குள் வந்த நிலையில், டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கி வருகிறது. ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா 2வது அலையின் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 1 லட்சம் அளவிலேயே உள்ளது. இதற்கிடையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. தலைநகர் டெல்லியில் தொற்று பாதிப்புகுறைந்துள்ளதால், இன்றுமுதல் ஊரடங்கில் இருந்து ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 400க்கும் குறைவானோருக்கே கொரோனா தொற்று பதிவாகியுள்ளது

இதன் காரணமாக ஊரங்கில் பல தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதுடன், மெட்ரோ ரயில் சேவைக்கு மாநில அரசு பச்சைக்கொடி காட்டி உள்ளது. இதனால் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் 50 சதவிகித பயணிகளுடன் மீண்டும் இயங்கி வருகிறது. இதனால் மக்கள் தங்களது இயல்புவாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ரயில் நிலைகளில் மக்கள் கூட்டம் காணப்படுவதுடன் சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து, எப்போதும் போல நெருக்கடியாக காணப்படுகிறது.

இதற்கிடையில், பொதுமக்கள், ரயில் பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.