சென்னை:

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் பகுதிகளில் அவ்வப்போது பள்ளங்கள் ஏற்படுவது மக்களிடையே பீதியை கிளப்பி இருக்கிறது. சமீபத்தில்  அண்ணா மேம்பாலம் அருகில் அடுத்தடுத்து பள்ளங்கள் ஏற்பட்டதும். அதில் பேருந்து மற்றும் கார் சிக்கியதும் மக்களிடையே கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை அண்ணாசாலையில் மண்ணின் தன்மையை ஆய்வு செய்யாத காரணத்தால் பள்ளங்கள் ஏற்பட்டன என்பது தவறான தகவல்.  மெட்ரோ ரயில் பணியால் அண்ணா மேம்பாலத்துக்கு எந்தவித ஆபத்தும் கிடையாது.

நேரு பூங்கா- சென்ட்ரல்- வண்ணாரப்பேட்டை- சின்னமலை சுரங்கப்பாதைப் பணி விரைவில் முடியும். அடுத்த ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பாதுகாப்பு, காற்று, போக்குவரத்து உள்ளிட்டவைகுறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று பங்கஜ்குமார் தெரிவித்தார்.

தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், “கோயம்பேடு – நேரு பூங்கா சுரங்கப்பாதைப் பணி பற்றிய ஆவணங்களை, மெட்ரோ ரயில் நிர்வாகம் தாக்கல்செய்துள்ளது. இந்த ஆவணங்களைக்கொண்டு, ஆய்வுசெய்த பின்னர், ரயில்வே அனுமதி அளிக்கும்” என்று தெரிவித்தார்.