கோவையில் நெடுஞ்சாலை துறையுடன் இனைந்து இரண்டு அடுக்கு பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்கடம் பேருந்து நிலையம் முதல் நீலாம்பூர் வரை சுமார் 20.4 கி.மீ. தூரம் மெட்ரோ ரயில் அமைக்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வரும் இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் கோவை சர்வதேச விமான நிலையம் வழியாக சென்று நீலாம்பூரில் ஒருங்கிணைந்த நிலையமாக அமையவுள்ளது.
கோவை அவிநாசி சாலை வழியாக செல்ல உள்ள இந்த வழித்தடத்தில் அண்ணா சிலை முதல் கோல்டுவின்ஸ் வரை நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேவேளையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை அவிநாசி சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும் என்று கடந்த நவம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து கோல்டுவின்ஸ் முதல் லே மெரிடியன் வரை சுமார் 3 கி.மீ. தூரம் நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து ஈரடுக்கு பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் தீர்மானித்தது.
இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத் துறையுடன் மேற்கொண்ட ஆலோசனையில் இங்கு இரண்டு அடுக்குகள் கொண்ட பாலம் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலடுக்கில் மெட்ரோ ரயில் போக்குவரத்தும் கீழடுக்கில் வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் இந்தப் பகுதியில் நில ஆர்ஜிதம் செய்ய வேண்டிய தேவை இருக்காது என்று கூறப்படுகிறது.
‘கோயம்புத்தூர் நகர மேம்பாலங்கள் – சமீபத்திய புதுப்பிப்பு’ என்ற தலைப்பில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, கோயம்புத்தூர் நேற்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நெடுஞ்சாலைகள் (சாலை பாதுகாப்பு) துறை, கோட்டப் பொறியாளர், ஜி. மனுநீதி இதனை தெரிவித்துள்ளார்.