டில்லி

முகநூல் மூலம் நமது தகவல்களை திருடுவதை தவிர்க்க ஒரு சில வழிகள் உள்ளன.

கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா என்னும் நிறுவனம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தலுக்காக முக நூலில் பலருடைய தகவல்களை திருடி உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.   அதையொட்டி பலரும் முகநூலில் இருந்து விலக உத்தேசித்து வருகின்றனர்.    தற்போது #டிலீட்ஃபேஸ்புக் என்னும் மெசேஜ் அனைத்து சமூக தளங்களிலும் வெளியாகி வருகின்றது.

பலருக்கு முகநூல் அவசியமான ஒன்றாக மாறி விட்டது.   இதனால் அவர்களால் தங்களின் முகநூல் கணக்கை முடித்துக் கொள்ள முடிவதில்லை.   அதே வேளையில் ஒரு சில நடவடிக்கைகள் செய்வதன் மூலம் நமது தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்க முடியும்.    பொதுவாக நீங்கள் ஒரு சில செயலிகளுக்கு உங்கள் விவரங்களை ஆராய உரிமம் அளித்திருப்பீர்கள்.   ஆகவே முதலில் அந்த செயலிகளை செயல் இழக்க செய்ய வேண்டும்.

இதற்கு செட்டிங் சென்று அதில் அப் என்பதற்குள்  நுழைய வேண்டும்.   அதில் நீங்கள் உங்கள் தகவல்களை ஆராய உரிமை கொடுத்த செயலிகள் இருக்கும்.  அவற்றை ஒவ்வொன்றாக நீக்க வேண்டும்.   இதற்கு உங்கள் மவுசை அந்த ஆப் மீது கொண்டு சென்றால்  X என காட்டும் இடத்தை கிளிக் செய்வதன் மூலம் நீக்க வேண்டும்.   உடன் அதை உறுதிப்படுத்த சொல்லும் போது உறுதிப் படுத்தினால்  அந்த செயலிகள் நீக்கப் பட்டுவிடும்.

ஏற்கனவே இந்த செயலிகள் உங்கள் விவரங்களை திருடி இருந்தால் அவற்றை திரும்ப பெற இயலாது.   இனி திருடாமல் இருக்க மட்டுமே இந்த முறை உதவும்.

அத்துடன் பிற தளங்களுக்கு முகநூல் கணக்கு மூலம் நுழையக் கூடாது.   அந்த தளங்களாலும் உங்கள் தகவல்களை பார்க்கவும் அதை எடுத்துக் கொள்ளவும் முடியும்.  அத்துடன் அதை செட்டிங் – ஆப் – ஆப் வெப்சைட் அண்ட் ப்ளக் இன் என சென்று எடிட் பட்டனை கிளிக் செய்து அதை செயலிழக்கச் செய்யலாம்.  இதன் மூலம் நீங்கள் எந்த ஒரு தளத்துக்கும் மீண்டும் செட்டிங் மாற்றாமல் நுழைய முடியாது.

இவை எல்லாம் வெறும் யோசனைகளே.  மேலும் இவற்றின் மூலம் இனி உங்கள் தகவல்கள் திருடப்படுவதை தடுக்க இயலுமே தவிர ஏற்கனவே திருடப்பட்ட தகவல்களை திரும்பப் பெற முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்கிறோம்.