சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டிய முறை
சிவன் கோவில் என்று மட்டுமல்ல எந்த கோவிலுக்கு நாம் சென்று வந்தாலும் நமக்குள் ஒரு பவர் வரத்தான் செய்யும். அந்த நேர்மறை ஆற்றல் நம்முடைய வாழ்க்கையில் சில திருப்புமுனைகளை உண்டு பண்ணும். இருப்பினும் சிவன் கோவிலுக்கு செல்வதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன, சிவன் கோவிலுக்கு செல்லும் போது நாம் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றிய சின்ன சின்ன ஆன்மீக ரீதியான குறிப்புகளைத்தான் இந்த பதிவை மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒருமுறை இப்படியும் சிவன் கோவிலுக்கு சென்று வந்து தான் பாருங்களேன். வாழ்வில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
வீட்டிலிருந்து சிவன் கோவிலுக்கு கிளம்பும்போது நெற்றியில் விபூதி இட்டுக் கொள்ளுங்கள். மனதிற்குள்
ஓம் சிவ சிவ, ஓம்
ஓம் நமசிவாய, சிவாய நம, ஓம்
இப்படி ஏதாவது ஒரு சிவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே செல்ல வேண்டும். எந்த மந்திரத்தை உச்சரித்து சென்றாலும் சரிதான். சிவன் கோவிலுக்குள் நுழைந்த உடனே நந்தி தேவரிடம் ஒரு அனுமதியை வாங்கிக் கொண்டு, சிவனை தரிசனம் செய்ய செல்லுங்கள். சிவனை தரிசனம் செய்ய செல்லும்போது குறைந்தபட்சம் கையில் இரண்டு வில்வ இலைகளையாவது எடுத்துச் செல்ல வேண்டும்.
உங்களால் எப்போதெல்லாம் வில்வ இலையால் மாலை கட்டி சிவபெருமானுக்கு போட முடியுமோ போடலாம். அந்த வில்வ மாலையின் நுனியில் ஒரு மஞ்சள் துணியில் 21 மிளகு அல்லது 11 மிளகு 51 மிளகு என்று எத்தனை மிளகுகள் வைக்க முடியுமோ வைத்து முடிச்சு போட்டு சிவபெருமானுக்கு மாலையை சாத்தி விடுங்கள். சிறிது நேரம் அந்த மாலை சிவன் கழுத்தில் இருக்கட்டும்.
நீங்கள் மூலவரை தரிசனம் செய்து விட்டு பிரகாரத்தை வலம் வர வேண்டும். பிரகாரத்தை சுற்றி இருக்கும் மற்ற தெய்வங்களிடம் பிரார்த்தனை வைக்க வேண்டும். இறுதியாக சிவன் கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அரை மணி நேரம் கண்களை மூடி அமர்ந்து தியான நிலையில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சிவனுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு பாடல்களை மனதிற்குள்ளே அல்லது வாய் விட்டோ பாடி தரிசனத்தை நிறைவு செய்யுங்கள்.
அதன் பின்பு கோவில் குருக்களிடம் சொல்லி நீங்கள் மாலை போட்டீர்கள் அல்லவா, அதில் மிளகு கட்டி வைத்தீர்கள் அல்லவா அதை திரும்பவும் பெற்றுக் கொள்ளுங்கள். மாலை சிவன் கழுத்தில் இருக்கட்டும். அந்த மிளகை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்து தினமும் ஒரு மிளகு என்ற வீதம் நன்றாக மென்று சாப்பிட்டால் உடலில் இருக்கும் பிணிகள் தீரும். உடம்பை பிடித்த எதிர்மறை ஆற்றல் விலகி உடம்பில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.