லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தனது ட்விட்டரில் கண்டித்திருந்த பாஜக எம்.பி. வருண் காந்தி மற்றும் சுல்தான்பூர் பாஜக எம்.பி.யும் வருணின் தாயாருமான மேனகா காந்தியும் பா.ஜ.க. தேசிய நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க. தேசிய நிர்வாகிகளின் பட்டியலை அதன் தலைவர் ஜெ.பி. நட்டா இன்று வெளியிட்டார், வழக்கமாக இடம்பெறும் 80 பேரில் மேனகா காந்தி மற்றும் வருண் காந்தியின் பெயர் இடம் பெறாதது உத்தர பிரதேச பா.ஜ.க. வினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் ஜனநாயகம் குறித்து வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பெருமையாக பேசி வரும் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஜனநாயக முறையில் போராடுவதற்கு மட்டுமல்ல, போராடுபவர்களுக்கு நியாயமான ஆதரவை கூட தெரிவிக்க உள்கட்சி ஜனநாயகம் இடம் கொடுக்கவில்லை என்று பா.ஜ.க. தொண்டர்கள் பேசி வருகின்றனர்.

விவசாயிகள் மீது கார் ஏற்றிய விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், கொலை செய்வதால் போராட்டம் ஓய்ந்து விடாது என்று உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதி பாஜக எம்.பி. வருண் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.