டில்லி

டில்லி செங்கோட்டையில் நடந்த கீதா மகோத்சவம் என்னும் நிகழ்வில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றி உள்ளார்.

நேற்று முன் தினம் டில்லியில் உள்ள செங்கோட்டையில் கீதா மகோத்சவம் என்னும் நிகழ்வு நடந்தது.  இந்த நிகழ்வில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி, ராமர் கோவில் ஆர்வலர் சாத்வி ரிதம்பரா மற்றும் பல ஆன்மிகத் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.   இந்நிகழ்வில் ஐதராபாத் நகரில் நடந்த  பெண் மருத்துவர் பலாத்காரக் கொலைக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தனது உரையில், “இது போல் குற்றங்கள் செய்வோருக்கும் தாய் மற்றும் சகோதரிகள் உள்ளனர் என்பதை அவர்களுக்கு யாரும் கற்பிப்பது இல்லை.   எனவே பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை தனது வீட்டு மகளிரைப் பார்த்து ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

பெண்களைத் தாய் போல் நினைப்பவர்கள் யாரும் இத்தகையைக் குற்றங்களைச் செய்ய மாட்டார்கள்.

அரசு இதைத் தடுக்க சட்டம் இயற்றியுள்ளது.   இந்த சட்டத்தை சரியாகப் பின்பற்றி நடக்க வேண்டும்.   நிர்வாகத்தின் தவறு மேலும் தொடரக் கூடாது.. அதே நேரத்தில் அனைத்தும் அரசின் பொறுப்பு எனவும் கூறினால் நிர்வாகம் சரியாக இயங்காது” எனத் தெரிவித்துள்ளார்.