சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, தனது சென்னை பயணம் மறக்க முடியாத நினைவுகள் என்று வீடியோவுடன் நன்றி தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

கடந்த 28ந்தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நேற்று (29ந்தேதி) அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அதையடுத்து,  2 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு மோடி நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு புறப்பட்டு சென்றார்.

தனது சென்னை பயணம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் வீடியோ பதிவிட்டு நன்றி தெரிவித்து உள்ளார். அவரது டிவிட்டில், ”சென்னையின் நினைவுகள், மறக்கமுடியாத பயணத்தை தந்ததற்கு நன்றி” என்ற தலைப்பில் வீடியோ காட்சியை மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோல் பிரதமர் மோடி, செஸ் கட்டங்கள் கொண்ட பார்டருடன் கூடிய தமிழர்களின் பாரம்பரியமான கதர் வேட்டி-சட்டை அணிந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கியது, நேப்பியர் பாலம் வழியாக நேரு விளையாட்டு அரங்கத்துக்கு காரில் வந்தது, வழிநெடுக உற்சாக வரவேற்பினால் பூ மழையில் நனைந்தது, செஸ் போட்டியை தொடங்கி வைத்தது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாமல்லபுரம் போன்ற நினைவுச்சின்னத்தை வழங்கியது, ‘தமிழ் மண்’ முப்பரிணாம கலை நிகழ்ச்சியை உற்சாகத்துடன் பார்த்து ரசித்தது உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.