சென்னை: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கூறி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மேகதாது விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார்.
கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே பல ஆண்டுகளாக மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுகள் தமிழ்நாடு அரசுக்கு எதிரான மன நிலையில் உள்ளது.இந்த நிலையில் சமீப காலமாக, திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியே, தமிழ்க அரசு மற்றும் தமிழக மக்களுக்கு எதிராக மேகதாது அணையை கட்டுவோம் என கூறி வருவது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், மேகதாது விவகாரம் குறித்தும், கர்நாடக மாநில அரசுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நீர்வளத்துறை, சட்டத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.