சென்னை: மேகதாதுவில் அணை கட்டுவோம் என்பது கர்நாடக காங்கிரஸ் அரசின் அரசியல் ஸ்டண்ட், மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக் காது. சட்டப்படியும் அது முடியாது என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரியை தொடர்ந்து மேகதாது அணை பிரச்சினையும் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்துள்ளது. அங்கு தற்போது ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்டுவோம் என்று கூறி வெற்றிபெற்ற நிலையில், ஆட்சியை கைப்பற்றியதும், மேகதாது அணை கட்டுவோம் என கூறி வருகிறது. சமீபத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில துணைமுதல்வரான டி.கே.சிவகுமார், அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன் என்றும், அண்டை மாநிலங்களை வாழ விடுங்கள் என கூறியிருந்தார்.
அரசு முறை பயணமாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டென்மார்க் நாட்டிற்கு சென்றிருந்தார். பயணத்தை முடித்துக்கொண்டு அவர், நேற்று இரவு 9 மணிக்கு சென்னை திரும்பினார். அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது,
நீர்வளத் துறையில் தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது என்பதில் உலகத்திலேயே முன்னோடியாக இருப்பது டென்மார்க். அது போன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆறுகளையும், சீரமைக்க வேண்டிய எண்ணம் அரசுக்கு உள்ளது. எனவே அந்த நாட்டு நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசினோம். அப்போது அவரிடம் நம் மாநிலத்தின் நிலைமைகளை எடுத்து கூறினோம். ஒரு வாரத்திற்குள் டென்மார்க் அதிகாரிகள், தமிழ்நாட்டிற்கு வருவார்கள். பின்னர் ஆறுகள் சீரமைப்பு குறித்து ஒரு திட்டம் வகுக்கப்படும் என்றார்.
மேலும் மேகதாது அணை குறித்த கேள்விக்கு பதில் கூறியவர்,
மேகதாதுவில் அணை கட்டி விடுவோம் என்று சொல்வது கர்நாடகா மாநில அரசின் அரசியல் ஸ்டண்ட் . மேகதாதுவில் ஒருபோதும் அங்கு அணை கட்ட முடியாது.. வேண்டுமென்றால் அவர்கள் அணைகட்டி விடுவோம் என்று பேசிக்கொண்டே இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில், அது கர்நாடகாவின் அரசியல் ஸ்டண்ட். அவர்களால் ஒன்றும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது. நான் இன்று காலை தமிழக முதல்வரை சந்திக்க உள்ளேன். மீண்டும் நானே டெல்லி சென்று, காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திப்பேன். எந்த காரணத்தைக் கொண்டும், மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. சட்டப்படியும் அது முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.