ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கார் நிறுத்தத்திற்கு ஏற்ப ஓட்டுநர்கள் தங்கும் வசதி இருக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், ஓட்டுனர்களுக்கு என்று வழங்கப்படும் பொது தங்கும் அறைகளில் (டார்மிட்டரி) கார் நிறுத்த எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கை வசதி இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு படுக்கைக்கும் இடையே புழங்குவதற்குத் தேவையான இடைவெளி இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த டார்மிட்டரி அறைகளில் தங்குபவர்களுக்கு 8 நபர்களுக்கு ஒரு கழிவறை மற்றும் ஒரு குளியலறை வீதம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தவிர, இந்த வசதிகள் அதே ஹோட்டல் அல்லது விடுதி வளாகத்திலோ அல்லது அங்கிருந்து 250 மீட்டருக்குள்ளோ இருக்கவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.

விபத்துகளை தடுக்க ஓட்டுனர்களுக்கு சரியான தூக்கமும் ஓய்வும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு ஓட்டுனர்கள் தங்குவதற்கு வசதியாக ஹோட்டல்களில் குறைந்த கட்டணத்தில் அறைகள் ஒதுக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டதை அடுத்து தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

விடுமுறை நாட்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு தமிழக அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.