சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வாகன நிறுத்துமிடம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து வாகனங்களை வாங்கி ரோட்டில் நிறுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் சொகுசு மற்றும் பழமையான கார்களை வாங்குவதில் ஆர்வம் கொண்ட சென்னையைச் சேர்ந்த ஒருவர் தனது 21 சொகுசு மற்றும் அரிய வகைக் கார்களை மெட்ரோ ரயில் நிலைய பார்்க்கிங்கில் நிறுத்தியுள்ளார்.

2019 ஆகஸ்ட் முதல் இதுவரை கார் நிறுத்த கட்டணமாக ரூ. 11.11 லட்சம் செலவு செய்திருக்கிறார். இவர் வைத்திருக்கும் சொகுசு கார்களின் மதிப்பை பொருத்தவரை இது சொற்ப கட்டணம் என்ற போதும் தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த கார்களை அப்புறப்படுத்த கூறியதால் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளார்.

2018 ம் ஆண்டு மெட்ரோ ரயில் பார்க்கிங் பகுதியை பயன்படுத்தவே ஆள் இல்லாத நிலையில் ஷெனாய் நகர் மற்றும் பச்சையப்பன் கல்லூரி ரயில் நிலைய பார்க்கிங் பகுதியை தனது கார் நிறுத்தும் இடமாக ஆக்கிக்கொண்டார் இதற்காக கார் ஒன்றுக்கு மாதம் ரூ. 2000 செலுத்தி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்த பார்க்கிங் பகுதி அவருக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பயணிகளின் வாகனங்களை நிறுத்த வசதியாக பார்க்கிங் இடத்தில் இருந்து இவரது கார்களை அகற்ற மெட்ரோ ரயில் நிர்வாகம் இவரிடம் வலியுறுத்தியதோடு அந்த கார்களையும் அகற்றியுள்ளது.

தனது சொகுசு கார்களை நிறுத்த இடமில்லாத நிலையில் எனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவரும் மெட்ரோ ரயிலில் தான் பயணிக்கிறார்கள் அவர்கள் போகும் போதும் வரும் போதும் எனது வாகனத்தை பார்த்துச் செல்வது எனக்கு பாதுகாப்பாக இருந்தது.

இவர்களின் அன்றாட பயணத்தை கணக்கில் கொணாடாவது எனது வாகனத்தை நிறுத்த மெட்ரோ நிர்வாகம் அனுமதித்திருக்கலாம் என்று அந்த பெயர் சொல்ல விரும்பாத தொழிலதிபர் தற்போது அங்கலாய்த்து வருவதோடு தனது சொகுசு கார்களின் மதிப்பு தெரியாத மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு போட்டியாக அதேபகுதியில் சொந்தமாக மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.