சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தும் வகையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி குழு இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றது. இந்த குழுவினர்  இன்று மத்திய அமைச்சரை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது பகுதியில் குடிதண்ணீர் தேவைக்கென அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. காவிரியில் குறுக்கே அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கிடைக்கும் காவிரி தண்ணீர் தடைபடும். இதனால், அதை நம்பி உள்ள டெல்டா விவசாயிகளின் பாடு திண்டாட்டமாகி விடும். இதனால், காவிரியின் குறுக்கே அணை கட்ட விவசாயிகள், தமிழக அரசு மற்றும்அ ரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரவித்து வருகின்றன.

ஆனால், மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு முரண்டுபிடித்து வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், கர்நாடக அரசு தனது நிலையில் உறுதியாக உள்ளது.

இதையடுத்து, மேகதாது அணை விவகாரம் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானத்தை மத்தியஅரசிடம் நேரில்  வழங்க நேற்று மாலை அனைத்துக்கட்சித் தலைவர்கள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்றனர்.

இன்று அந்த தீர்மான நகலை மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் ஜேந்திர சிங் செகாவத் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, கொடுத்து, மேகதாது அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

அனைத்துக்கட்சி  குழுவில்  திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளனர்.

அப்போது, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை பிரதமரிடம் கொடுக்க உள்ளனர்.