சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும் கொரோனா 3வது அலையின் தாக்கம் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருப்பதால், பொதுமக்களிடையே தடுப்பூசி எடுத்துக்கொள்வ திலும் ஆர்வம் மிகுந்துள்ளது. ஆரம்ப காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருந்த நிலையில் தற்போது, மத்தியஅரசிடம் தமிழகஅரசு தொடர்ந்து வலியுறுத்தி, தேவையான அளவிலான தடுப்பூசிகளை பெற்று வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக, தடுப்பூசிக்கு பற்றாக்குறை இன்றி, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும 43,051 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் 20 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த இலக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்களை சென்னை மாநகராட்சி நடத்தி வருகிறத.
இந்த முகாம்கள் அரசுத்துறைகள் மட்டுமின்றி, ரோட்டரி சங்கங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி துறையினர் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றனர். புதியதாக வருபவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 2வது டோஸ் தேவையானவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.