இந்தியாவில் இந்திக்கு அடுத்த படியாக வணிகத்தில் முன்னணியில் இருப்பது தெலுங்கு சினிமா உலகம் தான்.
ஆண்டுக்கு சுமார் 250 திரைப்படங்கள் வரை அங்கு ரிலிஸ் ஆகும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ், தெலுங்கு திரை உலகத்தை ரொம்பவே பதம் பார்த்து விட்டது.
சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, வெங்கடேஷ், பவன் கல்யாண், பிரபாஸ், ஜுனியர் என்.டி.ஆர், ஆகிய பெரிய நடிகர்கள் படம் எதுவும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகாததால் அவர்கள் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தெலுங்கு சூப்பர்ஸ்டாரான சிரஞ்சிவி 1978 ஆம் ஆண்டு சினிமா உலகில் அடி எடுத்து வைத்தார்.
ஒரு காலத்தில் ஆண்டுக்கு ஐந்து படங்களை கொடுத்த அவர், 2008 ஆம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.
இதனால், 2008 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சிரஞ்சீவியின் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.
அரசியலில் ஜொலிக்க முடியாததால், தனது கட்சியை மூட்டை கட்டி வைத்து விட்டு, நடிக்க ஆரம்பித்தார்.
கடந்த ஆண்டு ( 2019)நீண்ட இடைவெளிக்கு பிறகு ’சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற படம் அவர் நடிப்பில் வெளிவந்தது.
‘’ஆச்சார்யா’’ என்ற படத்தை இந்த ஆண்டு ரிலீஸ் செய்யலாம் என சிரஞ்சீவி நினைத்திருந்த வேளையில் கொரோனா பரவல் ஏற்பட்டு அவர் திட்டம் பணால் ஆனது.ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், எட்டு மாதங்களுக்கு பிறகு இப்போது தான் மீண்டும் ஷுட்டிங் தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு சிரஞ்சீவி தனது ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என கூறலாம்.
இந்த ஆண்டு மெகா நடிகர்கள் படம் வெளிவர இல்லையென்றாலும் அடுத்த ஆண்டு வட்டியும், முதலுமாக தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.
சிரஞ்சீவியின் ‘’ஆச்சார்யா’’ நாகார்ஜுனாவின் ‘’பிரமாஸ்திரா’’ ஜுனியர் என்.டி.ஆரின் ‘’RRR’’ , பிரபாசின் ‘’ராதேஷியாம்’’ உள்ளிட்ட படங்கள் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளன.
– பா. பாரதி