சென்னை: பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில், இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். இதன் காரணமாக, பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஸ்டூடியோவை  இசையமைப்பாளர்  இளையராஜா ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.  அவரை , பிரசாத்  ஸ்டூடியோ நிர்வாகம் கடந்த ஆண்டு அங்கிருந்து வெளியேற கூறியது. அதை இளைஞராஜா மறுக்கவே, அவரது அலுவலகம் பூட்டப்பட்டு, உள்ளே உள்ள ஸ்டூடியோ பொருட்களை எடுக்க அனுமதி மறுத்தது. இது தொடர்பாக திரையுலக பிரமுகர்கள் இருதரப்புக்கும் இடையே பஞ்சாயத்து பேசியும், முடிவுக்கு வராத நிலையில், விவகாரம் நீதிமன்றம் சென்றது.

பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் தனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தர கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா  வழக்குப் போட்டார்.  அவரது  மனுவில் தமக்க்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி உள்ளார். அத்துடன் பிரசாத் ஸ்டுடியோவில் 1976 முதல் இசை அமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தேன். அங்கு ஒருநாள் தியானம் செய்துவிட்டு பொருட்களை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் விசாரித்த நிலையில் நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் நுழைய இசையமைப்பாளர் இளையராஜவை அனுமதிக்க தயார் என்று அந்நிறுவனம் சார்பில் சொல்லப்பட்டது. அதாவது, தங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். பிரசாத் ஸ்டூடியோவக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோரக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரசாத் ஸ்டூடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன் என்றும் ஸ்டூடியோவில் உள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.