மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது, முதல் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 27 ம் தேதி நடைபெறுகிறது, இன்னும் 4 நாட்களே எஞ்சி உள்ள நிலையில், இந்த தொகுதிகளில் 25 ம் தேதி மாலையுடன் முதல் கட்ட பிரச்சாரம் ஓய்கிறது.

மாநில ஆட்சியை பிடிப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் பாஜக பல்வேறு விதமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது, இதில் கடந்த பிப்ரவரி 14 மற்றும் 25 ம் தேதிகளில் அங்குள்ள செய்தித் தாள்களில் வெளியான முழு பக்க வண்ண விளம்பரம் ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மேற்கு வங்கத்தில் 24,00,000 லட்சம் பேருக்கு வீடு வழங்கப்பட்டு அவர்கள் பயனடைந்ததாக ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார்கள்.

அந்த விளம்பரத்தில், பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா மூலம் தான் எனக்கு வசிப்பதற்கு ஒரு இடம் இருக்கிறது என்று அந்த விளம்பரத்தில் வரும் பெண்மணி கூறுவது போல் வாசகம் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து இந்தியா டுடே நாளிதழ் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது, அதில் கொல்கத்தா-வின் பௌபஜார் பகுதியில் உள்ள மலங்கா சந்தில் வசித்துவரும் லட்சுமி தேவி தான் அவர் என்பதை உறுதி செய்தது.

செய்தித்தாளில் வந்த விளம்பரம் குறித்து அவரிடம் கேட்டபோது, இந்த விளம்பரத்தில் இருப்பது தன் புகைப்படம் தான் என்றும், ஆனால் தன் புகைப்படம் இதில் எப்படி வந்தது என்பது குறித்தோ இந்த விளம்பரம் குறித்தோ தனக்கு தெரியாது என்று கூறினார்.

வீடு வழங்கப்பட்டதாக வந்த விளம்பரத்தில் வந்த லட்சுமி தேவி, ஒற்றை அறையில் ஒண்டு குடித்தனத்தில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

ஆறு பேர் கொண்ட குடும்பத்தில், குழந்தைகள் அறையினுள் படுத்துக்கொள்ள, பெரியவர்கள் வெளியில் உள்ள நடைபாதையில் படுத்துக்கொள்வதாக கூறும் லட்சுமி தேவி, இந்த இடத்திற்கு மாதம் ரூபாய் 500 வாடகை கொடுப்பதாக கூறினார்.

எழுதப்படிக்க தெரியாத தனக்கு, இந்த விளம்பரம் குறித்து அக்கம்பக்கத்தினர் சொல்லிதான் தெரியும் என்று சொல்லும் இவர், இந்த புகைப்படம் எங்கு எப்போது யார் எடுத்தது என்பது தெரியவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், பாபுகாட் பகுதியில் நடந்த ஒரு முகாமில், கழிவறையை சுத்தம் செய்த போது எடுத்த புகைப்படம் போல் உள்ளதாக ஊகம் தெரிவித்த அவர் தான் வசிக்கும் வீட்டில் கழிப்பறை வசதி கூட இல்லை என்று வருத்தப்பட்டார்.

இது குறித்து பா.ஜ.க. வை சேர்ந்த யாரிடமும் தான் கேள்வி எழுப்பவில்லை என்று கூறும் அவர் இந்த புகைப்படத்தை பயன்படுத்திக்கொள்ள தன்னிடம் யாரும் சம்மதம் கேட்கவில்லை என்றும் பதிலளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன் சிங்-கை தொடர்பு கொண்ட போது அவர் பதில் ஏதும் கூற மறுத்துவிட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருக்கிறது.