மும்பை

காராஷ்டிர அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என காவல்துறை ஆணையர் பரம்வீர் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

அனில் தேஷ்முக்

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லத்துக்கு வெளியில் வெடி பொருட்களுடன் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது.   இதையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தில் பல பரபரப்பூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.   இந்த விவகாரத்தைத் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

இந்த காரை அம்பானியின் இல்ல வாசலில் நிறுத்தியதாக மும்பை காவல்துறை குற்றப்பிரிவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சச்சின் வாலி கைது செய்யப்பட்டார்.   அத்துடன் மும்பை காவல் துறை ஆணையர் பரம்வீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  அவர் இது குறித்து முதல்வர் அலுவலகத்துக்கு ஒரு இ மெயில் கடிதம் அனுப்பி உள்ளார்.

பரம்வீர் சிங்

அந்த கடிதத்தில் அவர் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தங்களை மாதம் தோறும் ரூ,. 100 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என நெருக்கடி அளித்ததாகவும்  கைது செய்யப்பட்ட சச்சின் வாலியை இந்த வசூலுக்கு உதவுமாறும் கூறியதாகத் தெரிவித்திருந்தார்.   மேலும் இதனால் தான் கைது நடவடிக்கையும் தனது பணிமாற்றலும் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் கடும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பரம்வீர் சிங் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில் அவர் பல்வேறு விசாரணைகளில் அமைச்சர் அனில் தேஷ்முக் குறுக்கிடுவதாகத் தெரிவித்துள்ளார்.  மேலும் அனில் தேஷ்முக் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.