மதுரை: புகழ்பெற்ற மதுரை  மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.  நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 4-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

இன்று தெப்பத்திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு, அதிகாலையில்,  சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் கொடிமரம் முன்பு சிம்ம வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.

அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் ஓத அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டினர். தொடர்ந்து தை தெப்பத்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து, இன்று இரவு சிம்ம வாகனத்தில் அம்மனும், கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் உலா வருகின்றனர்.

பிப்ரவரி 4-ந் தேதி வரை நடக்கும் 12 நாட்கள் திருவிழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் அன்னம், பூதம், காமதேனு, கைலாச பர்வதம், தங்கக்குதிரை, ரிஷப வாகனம், யாழி, நந்திகேசுவரர் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

விழாவில் 8ம் நாளான வருகிற 31-ந்தேதி காலை 9 மணிக்கு தங்க பல்லக்குகளில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் சித்திரை வீதி, நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையம், மகபூப்பாளையம் வழியாக வலைவீசி தெப்பக்குளத்தில் எழுந்தருளுகின்றனர்.

விழாவின் முக்கிய  நிகழ்ச்சியான தை தெப்ப உற்சவம் வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணியளவில் வெள்ளி அவுதா தொட்டில் அம்மனும், சிம்ம வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளுகின்றனர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி தெரு, கீழமாசி வீதி, யானைக்கல், கீழவெளி வீதி, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுகின்றனர்.

தொடர்ந்து,  தண்ணீர் நிரம்பிய தெப்பக்குளத்தில் தெப்ப உற்வசம் நடக்கிறது. தெப்பத்தை சுவாமி-அம்பாள் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

இங்கு மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்பின் இரவு சுவாமி-அம்பாள் கோவிலுக்கு திரும்புவார்கள்.