சென்னை:  ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க மறுத்து வரும் தமிழகஅரசின் நடவடிக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  கடந்த ஆண்டு  50 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி   ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில்,  சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி,  காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.  ஆனால், காவல்துறை அதன்பிறகு, அனுமதி கோரிய  சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி வழங்கியது.

பின்னர் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு, சில பகுதிகளில் நடத்த அனுமதி வழங்கியது. அதன்படி குறிப்பிடட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. மீதமுள்ள இடங்களிலும் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, காவல்துறை தரப்பில், நான்கு சுவருக்குள் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படும் என கூறியது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. நீதிபதியும், தமிழகஅரசின் பதிலை கடுமையாக சாடியிருந்தார்.

இந்த வழக்கு பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது, தமிழகஅரசு சார்பில், ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக உள்ளதாகவும், அப்படியே திகழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஆர்எஸ்எஸ் மதசார்புடையதாக இருந்தாலும், அனைத்து மத உரிமைகளையும் காக்கும் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. அதனால், ஊர்வலம் நடத்துவது தொடர்பாக மீண்டும் மனு அளித்தால் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறியது.

இந்த வழக்கு மீதான வாதங்கள் நிறைவடைந்ததால், மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.