சென்னை: கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி பேராசிரியரும், புற்றுநோய் சிகிச்சை நிபுணருமான மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  மருத்துவக் கல்லூரி இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏபிவிபி இயக்கத்தைச் சேர்ந்தவர் பிரபல மருத்துவர் சுப்பையா. இவர் ஏற்கனவே பக்கத்து வீட்டுக்காரர் வாசலில் சிறுநீர் கழித்து சர்ச்சைக்குள்ளானவர். புற்றுநோய் நிபுணரான இவர், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் அவர், தஞ்சாவூர் பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஏவிபிவி நபர்களை சிறையில் சென்று பார்த்தார். இதன் காரணமாக, அவரை மருத்துவக் கல்லூரி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்தார்.  மருத்துவர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

தமிழக அரசின்  இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், எந்த அரசியல் கட்சியுடனும் தனக்குத் தொடர்பில்லாத நிலையிலும், எவ்வித குறிப்பாணையும் கொடுக்காமலும் பிறப்பிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், தனது இடைநீக்க உத்தரவுக்கு  தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி டி. கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  எதிர் மனுதாரர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக்கூறி, வழக்கு குறித்து மருத்துவ கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் ஒன்பதாம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம்!