100 கோடிக்கும் அதிகமான பயனர்கள் மாதம்தோறும் யூ-டியூபை பயன்படுத்துகின்றனர். யூ-டியூப் சமூக வலைதளத்தில் நாள்தோறும் 100 கோடி மணி நேரத்திற்கும் அதிகமான தகவல்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்க்கின்றனர்.

இவை அனைத்தும் 17 ஆண்டுகளுக்கு முன் 23-ஏப்ரல்-2005 ல் ஒரு 18 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ பதிவில் இருந்து தொடங்கியது என்பதை இப்போது யாராலும் நம்ப முடியாது.

யூ-டியூப் சமூக வலைத்தளத்தை தொடங்கிய ஜாவித் கரீம் முதன் முதலில் ‘மீ அட் தி ஜூ’ (உயிரியல் பூங்காவில் நான்) என்ற தலைப்பில் பதிவேற்றிய வீடியோ தான் முதன் முதலாக யூ-டியூபில் பதிவேற்றப்பட்ட வீடியோ.

3 மில்லயனுக்கு அதிகமான சப்ஸ்க்ரைபர்களைக் கொண்ட கரீமின் யூ-டியூப் சேனலில் இந்த ஒரு வீடியோவைத் தவிர வேறு ஏதும் பதிவேற்றப்படவில்லை என்ற போதும், அவர் யூ-டியூப் எனும் இந்த சமூக வலைத்தளத்தை 165 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டார்.

இன்று பல்வேறு வதந்திகள் மற்றும் வெறுப்புணர்வுகளைப் பரப்பும் சமூக வலைத்தளமாக யூ-டியூப் மாறிக்கொண்டு இருக்கிறது என்பது சமீபத்தில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட 16 யூ-டியூப் மற்றும் முகநூல் சேனல்களே சான்றாக இருக்கிறது.

தடை செய்யப்பட்ட இந்த யூ-டியூப் மற்றும் முகநூல் பக்கங்களை மட்டும் சுமார் 68 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். நம்பகத்தன்மையற்ற, எதையும் ஆராயாமல் வெளியிடப்படும் செய்திகள் அதிகரித்து வரும் நிலையில், 17 ஆண்டுகளுக்கு முன் ஒரு உயிரியல் பூங்காவில் யானை முன்பு நின்று எடுக்கப்பட்ட வீடியோ-வை பதிவேற்றியது தான் முதன் முதல் யூ-டியூப் பதிவு எனும் போது வியப்பாக உள்ளது.