சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது. இன்று சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

நடப்பாண்டும் மருத்துவப்படிப்பில் ஓபிசி மற்றும் உயர்வகுப்பினருக்கான இடஒதுக்கீடு முறையில் கலந்தாய்வு நடைபெறும் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று தமிழகத்துக்கான கலந்தாய்வு தொடங்குகிகறது.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 கல்லூரிகள் உள்பட மொத்தம், 37 அரசு மருத்துவ கல்லூரிகளும், இரண்டு அரசு பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல், இரண்டு அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு 1,930 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதைத் தவிர சுயநிதி கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,145 எம்பிபிஎஸ் இடங்களும், 635 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அந்த இடங்களுக்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இன்று, சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு சென்னை ஓமந்தூராாா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து  அரசுப் பள்ளி மாணவா்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான நேரடி கலந்தாய்வு 2 நாட்கள்  நடைபெறும். பின்னா் வரும் 30-ஆம் தேதி முதல் பொதுக் கலந்தாய்வு மாணவா் சோக்கை இணையதளங்கள் வாயிலாக நடைபெற உள்ளது.