லக்னோ

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி தமது மருமகனை தனக்கு அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு 67 வயது ஆகிறது. அவரது கட்சிக்கு உத்தரப் பிரதேசம் தவிர ராஜஸ்தான் உள்பட பிற மாநிலங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இன்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் நடந்தது.

ஆலோசனைக் கூட்டத்தில் மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார்.  அப்போது ஆகாஷ் ஆனந்த் தனக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சியை வழிநடத்துவார் எனத் தெரிவித்தார்.  இவர் மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாரின் மகன் ஆவார்.

முந்தைய மக்களவைத் தேர்தலின் போது பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட ஆகாஷ் ஆனந்த், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஆக்கப்பட்டார். தொடர்ந்து வாரிசு அரசியலைத் தீவிரமாக எதிர்த்துப் பேசி வந்த மாயாவதி, கடந்த 2019ஆ ம் ஆண்டு தனது சகோதரர் ஆனந்த் குமாரை தேசியத் தலைவராகவும், மருமகன் ஆகாஷை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்தார்.

தற்போது 28 வயதாகும் ஆகாஷ் ஆனந்த் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அரசியலுக்குள் நுழைந்தார். கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் தனது அத்தையுடன் இணைந்து காணப்பட்டார்.