சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மே 2-ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பண பலத்தைத் தடுக்க இரு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் எனத் தேர்தல் அறிவிப்பின்போது தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்ததாகவும், இருந்தபோதும் தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் சார்பில் பணப் பட்டுவாடா நடந்ததாகவும் , இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தமிழகத்தில் மட்டும் 430 கோடி ரூபாயை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
பணப் பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து, விசாரணை நடத்தக் கோரியும், வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் அளித்த புகாரைப் பரிசீலிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. வாதங்களைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி நீதிமன்றம் கிருஷ்ணசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் அற்ப காரணங்களுக்காக இனிமேல் இதுபோன்று வழக்கு தொடர்வதை கிருஷ்ணசாமி அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.