சென்னை:

நாளை மே1ந்தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலாளர் களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

மே தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், விஜயகாந்த், கே.எஸ்.அழகிரி, வாசன், தினகரன், முத்தரசன், சரத்குமார், வேல்முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர்  எடப்பாடி வாழ்த்து:

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகுக்கு பறைசாற்றும் மே தினத்தில் உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்களுக்கு உளமார்ந்த மே தின நல்வாழ்த்துக்கள்

நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் தொழிலாளர் பெருமக்களின் உழைப்பு போற்றுதலுக்குரியது என்றும், உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளில் தொழிலாளர் கள் நலமுடனும், வளமுடனும் வாழ வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாழ்த்து:

சிகாகோ நகரில் தொழிலாளர்கள் பிரமாண்டமான வெற்றிப் பேரணியை நடத்தி, தங்கள் இன்னுயிரை துச்சமென இழந்து பெற்ற, தீரமிகு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரிமைகளை நினைவு கூறும் தினம் மே 1 என்று கூறியுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்களின் வாழ்வில் இன்பம் பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் இதயம் நிறைந்த மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகத் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

உழைக்கும் தொழிலாளர்கள் உரிய உரிமை பெறவும், சமுதாயத்தில் உயர்வு காணவும் உருவானது மே தினம் எனத் தெரிவித்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், வறுமையை ஒழித்து, எல்லோருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைத்திட மே தின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம் என்றும், ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் தொழிலாளர்களுக்கு மே தின நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.