ண்டுதோறும் மே 31-ம் தேதி ‘சர்வதேச  புகையிலை எதிர்ப்பு தினமாக’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  புகையிலை உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், உலக சுகாதார அமைப்பு புகையிலை உபயோகத்தைக் குறைக்க பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.

புகையிலை பயன்பாடு உலகெங்கிலும் மரணங்களின் முன்னணி காரணங்களில் ஒன்றாக உள்ளது. சுவாச நோய்களுக்கான முக்கிய ஆபத்து காரணி புகையிலை  ஆகும்! நுரையீரலில் பாதிப்புக்கு காரணம் புகையிலை உபயோகப்படுத்துவதே. அதை கட்டுப்படுத்து, முற்றிலும் ஒழித்து நோயற்றை வாழ்வுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக புகையிலைஎதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புகையிலை உபயோகிப்பவர்களில் 50% பேருக்கும் மேலானோர் சுவாச கோளாறு காரணமாக மரணத்தை தழுவி வருகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் பேர் புகையிலையால் மட்டும் மரணிக்கின்றனர். இதில் ஏறத்தாழ 6,00,000 பேர் புகையிலை உபயோகிப்பவர்களின் அருகாமையில் இருப்பவர்கள். புகையிலை உபயோகிப்பவர்களில் 80% பேர் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

உலகளவில் பல விதமான புற்றுநோய்கள் இருந்தாலும் அதிகம் பேரை தாக்குவது நுரையீரல் புற்றுநோய்தான்.

புகையிலையால் நுரையீரல் புற்றுநோயால் உலகம் முழுவதும் கடந்த  5 ஆண்டுகளுக்கு முன்பு 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம்  தெரிவித்திருந்த நிலையில், தற்போது இதன் பாதிப்பு பல மடங்காக பெருகி இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.  உலகளவில் இந்நோய் பரவியிருந்தாலும் பாதிக்கப்பட்டோரில் 58% வளரும் நாடுகளில்தான் உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டனில் 45 ஆயிரம் பேருக்கும், அமெரிக்காவில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கும், ஆஸ்திரேலியாவில் 12ஆயிரத்து 500 பேருக்கும இந்த நோய் கண்டுபிடிக்கப்படுகிறது. இவ்வளவு நவீன மருத்துவ வசதிகள் வந்துவிட்ட பின்னரும் நுரையீரல் புற்றுநோய் தாக்கியவர் கள் பிழைக்கும் விகிதம் மிகமிக குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளது.

சிகரெட் பிடிப்பதால்தான் இந்த நோய் வருகிறது என்றும் அதை விட்டுவிட்டால் நோய் குணமாகி விடும் என்பதும் பலரது பொதுவான புரிதல். ஆனால் இந்த புரிதலில் சில குறைகள் உள்ளன. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒருபோதும் குறைவதில்லை.

பெண்களை விட ஆண்களையே இந்த நோய் அதிகம் பாதிக்கிறது. ஆனால் அண்மைக்காலமாக நுரையீரல் புற்றால் இறக்கும் ஆண்கள் எண்ணிக்கை குறைவதாகவும், வெள்ளைக்கார இளம் பெண்களிடம் இது அதிகரிப்பதாகவும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

நம் நாட்டின், நம் உலகின் நிலை இதுதான். எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், எத்தனை திட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும், எவ்வளவு விழிப்பு உணர்வு ஏற்படுத்தினாலும் தனிமனித ஒழுக்கம் ஏற்படாவிடில் எதுவும் மாறாது! புகையிலையை தவிர்ப்போம்,  உடல் நலத்தை காப்போம்…