டில்லி:

அயோத்தி விவகாரத்தில் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை, அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரிய நிர்வாகக்குழு உறுப்பினர் மவுலானா சையது சல்மான் ஹூசைனி நத்வீ சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது மசூதியை இடமாற்றம் செய்ய இஸ்லாம் அனுமதிப்பதாக ஷூசைனி தெரிவித்தார்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாகக்குழு கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஹூசைனி நத்வீயை மற்ற உறுப்பினர்கள் க டுமையாக விமர்சனம் செய்தனர்.

இஸ்லாமியர்களின் நன்மை கருதியே ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து பேசியதாக நத்வி தெரிவித்த கருத்தை யாரும் ஏற்கவில்லை. அவரை அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை மூத்த உறுப்பினர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக சல்மான் ஹூசைனியிடம் விரிவான விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே சமரச தீர்வு ஏற்படுத்த ரூ. 5 ஆயிரம் கோடி பணமும், ராஜ்யசபா எம்.பி பதவி வழங்க வேண்டும் என்று ஹூசைனி நிபந்தனை விதித்தாக ரவிசங்கரின் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.