ஜம்மு:

சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான தற்கொலைப் படை தாக்குதலை நடத்த, பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறு ஜெய்ஸ்- இ-முகமது தீவிரவாத இயக்க தலைவர் மசூத் அஜார் உத்தரவு பிறப்பித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானால் வழிநடத்தப்படும் ஜிகாதி தீவிரவாத அமைப்புகளுடன் ஆறு மாதங்களாக எவ்வித கூட்டத்திலும் ஜெய்ஸ்- இ-முகமது இயக்கத் தலைவர் மசூத் அஜார் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், எட்டு நாட்களுக்கு முன்பே சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீதான தாக்குதலை நடத்த அசார் உத்தரவிட்ட ஆடியோ வெளிவந்துள்ளது.

இதில் இந்தியா பாதுகாப்பு படைவீரர்களால் கொல்லப்பட்ட தனது மருமகன் உஸ்மான் மரணத்துக்கு பழிதீர்க்கும் வகையிலேயே புல்வாமாவில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது தற்கொலைப் படை தாக்குதலை நடத்த, பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மசூத் அஜார் தீவிரவாத குழுக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தீவிரவாத செயல் என்பார்கள். அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக கூறுவார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எல்லையை கடந்து சென்று தாக்குதலை நடத்துங்கள் என்று அந்த ஆடியோவில் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்த விவரத்தை மற்ற தீவிரவாத குழுக்களுக்கு மசூத் அஜார் தெரிவிக்கவில்லை.

மாறாக தனது மருமகன் முகமது உமர் மூலம் காஷ்மீரில் உள்ள இளைஞரை மூளைச் சலவை செய்து இந்த தாக்குதலுக்கு அவரை மனித வெடிகுண்டாக பயன்படுத்தியுள்ளனர்.