திருச்செந்தூர்: மாசி மகம் திருவிழாவையொட்டி, இன்று காலை  திருச்செந்தூர் முருகன் கோவிலில் சரண கோஷத்துடன் கொடியேறியது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சரணகோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ஆம் திருவிழா 23ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திருவாவடு துறை ஆதீனம் வேலப்ப தம்பி ரான் சுவாமிகள், இணை ஆணையர் கார்த்திக், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசு ராஜா, இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், சார்பு நீதிபதி வஷித்குமார்,ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் தக்கார் கருத்துப்பாண்டி நாடார், நகராட்சி துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், சைவ வேளாளர் ஐக்கிய சங்க முன்னாள் தலைவர் ஜெயந்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.  காலை 4.52 மணிக்கு கோவில் செப்பு கொடி மரத்தில் மாசித்திரு விழா கொடியேற்றம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஓம் முருகா சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடை பெற்றது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

திருவிழாவின் முக்கிய விழாவான 5-ம் திருவிழா வரும்  18-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம்,  இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவரு வாயில் தீபாராதனை நடக்கிறது.

20 ஆம் தேதியில் அதிகாலை 4.30 மணிக்கு அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும் நடைபெறும்.  தொடா்ந்து 8.45 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு சுவாமி சிவன் அம்சத்தில் தங்க சப்பரத்தின் மீது சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

பிப்ரவரி 21 ஆம் தேதி காலை சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி திரு வீதி வலம் வந்து மேலக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

முற்பகல் 11 மணிக்கு சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி வந்து திருக்கோயில் சேர்கிறார்.

பிப்ரவரி 22 ஆம் தேதி சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருள்கின்றனார்.

பத்தாம் திருநாளான பிப்ரவரி 23 ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கின்றனர்.

11-ம் திருநாளான 24-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

பிப்ரவரி 25ந்தேதி அன்று 12 ஆம் திருநாளுடன் விழா நிறைவு பெறுகின்றது.

விழாவையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.