வாஷிங்டன்: அமெரிக்காவில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலை அக்டோபர் 14-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்தியாவுக்கு வெளியே முதன்முறையாக அமெரிக்காவில் சட்டமேதை அம்பேத்கரை கவுரப்படுத்தும் வகையில்  சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை பெற்ற  இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர், ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இந்திய அரசியலமைப்பின் சிற்பி என போற்றப்படும், இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர்.

இவரது பெருமையை போற்றும் வகையில் இந்தியாவின் பல இடங்களில் அவருக்கு சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், இந்தியாவுக்கு வெளியே அம்பேத்கருக்கு தற்போதுதான் முதன்முறையாக அமெரிக்காவில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

வாஷிங்டனுக்கு தெற்கே சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள மேரிலாந்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் (AIC) ஒரு பகுதியாகும். ‘சமத்துவ சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிலை  அம்பேத்கர் சர்வதேச மையத்துக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில்  19அடி உயரத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரின் அழியாத மரபின் அடையாளமாக இந்த சிலை இருக்கும் என்று தெரிவித்துள்ள மேரிலேண்ட் மாகாண தலைவர், இந்த நினைவுச் சின்னம் அம்பேத்கரின் போதனைகளைப் பரப்பவும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சிலை அக்டோபர் 14ந்தேதி திறக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார். இந்த சிலை திறப்பு நிகழ்வில் அமெரிக்கா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள மிகப் பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய புகழ்பெற்ற சிற்பி ராம் சுடார், அம்பேத்கர் சிலையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.