காங்டாக்: சிக்கிம் மாநில பள்ளத்தாக்கில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும்  திடீர் வெள்ளத்தில் சிக்கி அந்த பகுதியில் முகாமிட்டிருந்த 23 ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிக்கிமில் நேற்று (செவ்வாய்க்கிழமை)  இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 23 இந்திய ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.

வடகிழக்கு சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி  23 வீரர்கள் காணாமல் போயுள்ளதாக இந்திய ராணுவம்  இன்று காலை  (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் திடீரென மேகம் வெடித்ததால்,  அந்த பகுதியில் உள்ள டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில், அந்த பகுதியில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்கள் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போனதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

டீஸ்டா ஆறு சிக்கிம் மற்றும் மேற்கு வங்காளம் வழியாக பாய்ந்து வங்கதேசத்திற்குள் நுழைகிறது. இங்கு கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு வடக்கு சிக்கிமில்  லோனாக் ஏரியின் மீது மேக வெடிப்பு காரணமாக  பெய்த கனமழையால், அது நிரம்பி வழிந்தது . தொடர்ந்து  பெய்த கனமழையால் டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தது.  தொடர்ந்து டீஸ்டாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணிக்காக முகாமிட்டிருந்த ராணுவ வீரர்கள், டீஸ்டா நதியில் ஏற்பட்ட திடீர்  பெரு வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர்.  அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிக்கிம் நிர்வாகம் குடியிருப்பாளர்களுக்கு உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்ளூர்வாசிகளால் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பகிரப்பட்ட வீடியோக்கள் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டிருப்பதையும் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுவதையும் காட்டுகின்றன. இந்த மழை வெள்ளத்தால், “யாரும் காயமடையவில்லை, ஆனால் பொதுச் சொத்துக்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. சிங்டாமில் சிலரை காணவில்லை. நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று முதல்வர் பிரேம் சிங் தமாங் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விஜயம் செய்த போது கூறினார்.

சிக்கிமின் சுங்தாங்கில் உள்ள ஏரி நிரம்பியதால் டீஸ்டா நிரம்பி உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “Gazoldoba, Domohani, Mekhaliganj மற்றும் Ghish போன்ற தாழ்வான பகுதிகள் பாதிக்கப்படலாம் என்றும் அந்த பகுதியில் வசிப்பவர்கள்  எச்சரிக்கையாக இருக்கவும்” என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.