ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசாக அளித்திருக்கிறார்.

வளர்ப்பு பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் சோனியா காந்தி. அவருக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் கோவா சென்று நாய்க்குட்டி ஒன்றை ராகுல் காந்தி வாங்கி வந்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோவை இன்று தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ‘நூரி’ தனது குடும்பத்தின் புதிய உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவாவைச் சேர்ந்த நாய் வளர்ப்பாளர்களான ஷர்வானி பித்ரே மற்றும் அவரது கணவர் ஸ்டான்லி பிரகன்கா குறித்து கேள்விப்பட்ட ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக ஆகஸ்ட் மாதம் அங்கு சென்றிருந்தார்.

அவர்களிடம் இருந்து ஜாக் ரஸ்ஸல் டெரியர் இனத்தைச் சேர்ந்த நாய்க்குட்டி ஒன்றை வாங்கிய ராகுல் காந்தி அதை தன்னுடன் விமானத்தில் டெல்லி கொண்டுவந்தார்.

வீட்டிற்கு வந்த ராகுல் காந்தி அந்த நாய்க்குட்டியை வெளியில் வைத்துவிட்டு சோனியா காந்தியை வெளியே வருமாறு அழைத்தார், தயக்கத்துடன் வெளியில் வந்து பார்த்த சோனியா காந்தி நாய்குட்டியைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டுப் போனார்.

இந்த நாய்க்கு நூரி என்று பெயரிடப்பட்டுள்ளது, இது சோனியா காந்தி வைத்துள்ள மற்ற நாய்களுடன் விளையாடுவதும் அந்த வீடியோவில் உள்ளது.

ராகுல் காந்தி குடும்பத்தின் புதிய வரவான நூரி நாய்க்குட்டி வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.